Skip to main content

மொத்தமாக சுருட்டிய கொள்ளையர்கள்; 4 மணி நேரத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தனிப்படை

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

police found the missing hand in Trichy in 4 hours

 

திருச்சி மாவட்டம் மலைக்கோட்டைக்கு அருகே உள்ள சந்துக்கடை சௌந்தரபாண்டியன் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவர் சொந்தமாக தங்க ஆபரணங்கள் செய்யும் நகைப்பட்டறை ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதில் வரும் வருமானத்தை வைத்து தனது மனைவி குழந்தைகளுடன் ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். 

 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இ.பி ரோடு பகுதியில் உள்ள வேதாந்திரி நகரில் தான் புதிதாகக் கட்டியுள்ள வீட்டிற்கு தனது குடும்பத்துடன் குடியேறியுள்ளார். அதன்பிறகு, அடுத்த நாள் காலை ஜோசப் வழக்கம்போல் தனது நகைப்பட்டறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த கடையின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜோசப், மிகுந்த பதற்றத்துடன் உள்ளே நுழைந்துள்ளார். 

 

அப்போது, அந்த கடைக்குள் இருந்த 950 கிராம் தங்கம், கால் கிலோ வெள்ளி மற்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் ஜோசப், சில நிமிடங்கள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போயுள்ளார். அதன்பிறகு, உடனடியாக கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பகுதி முழுவதும் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அதுமட்டுமின்றி, காவல்துறை ஆணையர் அன்பு மற்றும் காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி ஆகியோர் தலைமையில் விரைவாக தனிப்படை அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்துள்ளனர். 

 

இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட ரகசிய விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கருவாட்டுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பரணிகுமார் மற்றும் பாலக்கரையைச் சேர்ந்த சரவணன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட குற்றவாளிகளை மதியம் 12.30 மணிக்குள் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் கொள்ளையடித்த அனைத்து நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கொள்ளை விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா வெகுவாக பாராட்டியுள்ளார். அதே சமயம், நகைகளை கொள்ளையடித்த குற்றவாளிகளை நான்கே மணி நேரத்தில் விரட்டிப் பிடித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்