பெண் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு வந்திருந்த பெண் ஒருவர் அங்குள்ளவர்களின் செல்போன்களை திருடிச் சென்ற சம்பவம் திண்டுக்கல்லில் நிகழ்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 26 ஆம் தேதி பெண் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் பெண்கள் தேர்வு எழுதி இருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு நடைபெற்ற பொழுது அங்கு வந்திருந்தவர்கள் செல்போன் மற்றும் பர்ஸ் ஆகியவற்றை உள்ளே எடுத்துச் செல்லக்கூடாது என்ற நிபந்தனையால் தேர்வு மையத்தின் வெளியே ஒரு பெரிய அட்டைப் பெட்டியில் செல்போன் மற்றும் பர்ஸ்களுக்கு நம்பர் டோக்கன் ஒட்டப்பட்டு பாதுகாப்பாக வைத்துவிட்டுச் சென்றனர்.
அப்பொழுது தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தவர்களில் மூன்று பேரின் விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரித்ததில் வேடசந்தூரைச் சேர்ந்த சுதா என்ற பட்டதாரி பெண் சப் இன்ஸ்பெக்டர் தேர்வு எழுத வந்த நிலையில், செல்போன்களைத் திருடியது தெரிய வந்தது. தற்போது செல்போன் திருட்டில் ஈடுபட்ட சுதாவை போலீசார் கைது செய்துள்ளனர்.