சிதம்பரம் ரயில்நிலைய நடைமேடையில் சிதம்பரம் இருப்புப்பாதை காவல்துறை மற்றும் கடலூர் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பு சார்பில் குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிதம்பரம் இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். மாவட்டக் குழந்தைகள் நல அலுவலர் பார்த்திபராஜா, அலுவலர் சதிஷ்குமார், இருப்புப்பாதை காவல் உதவி ஆய்வாளர் அன்பு ஜூலியட், ரவிச்சந்திரன் உள்ளிட்ட இருப்புப்பாதை காவலர்கள் கலந்துகொண்டு நடைமேடைகளிலிருந்த பயணிகளிடம் குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்தும், ஆபத்தில் சிக்கியிருக்கும் குழந்தைகளை மீட்க உதவும் '1098' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்தும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும், அடித்து துன்புறுத்துதல் உள்ளிட்ட இதர கொடுமைகளுக்கு ஆளாகும் குழந்தைகளைப் பார்த்தாலும், குழந்தைத் திருமணம் பற்றி தகவல் அறிந்தாலும் '1098' என்ற எண்ணுக்கு தகவலளிக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். பின்னர் போக்சோ சட்டம் என்றால் என்ன, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பது எப்படி என்பது குறித்து பயணிகள் மற்றும் அந்த பகுதியிலிருந்த பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்களிடம் விளக்கி துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்கள்.