என்.எல்.சிக்கு வீடு, நிலம் கொடுத்த தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி என்.எல்.சி தலைமை அலுவலகத்தினை முற்றுகை செய்தனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியிலுள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக கத்தாழை, கரிவேட்டி, வளையமாதேவி, மும்முடிசோழகன் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள், கடந்த 10 வருடத்திற்கு முன்பு, தங்களது வீடு, நிலங்களை கொடுத்தனர். வீடு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு குறுகிய காலப் பணியாக, தினக்கூலி ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்பட்டது. அப்படி பணியில் இணைந்தவர்கள் கடந்த 10 வருடமாக, இரண்டாவது சுரங்க தோட்டக்கலைத் துறையில் பணிபுரிந்து வருகின்றனர்.
அவ்வாறு பணி புரியும் சுமார் 150க்கும் மேற்பட்டோர் கடந்த 10 ஆண்டுகளாக, ஒப்பந்த அடிப்படையிலேயே பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில், மூன்று வருடத்திற்கு, ஒருமுறை ஒப்பந்தம் மாறுகின்ற போது, அடுத்த வரும் ஒப்பந்த வேலைக்காக காத்திருப்பதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகி வருவதால், BMC என்று சொல்லக்கூடிய நிரந்தர வேலையை, என்.எல்.சி நிர்வாகம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி என்.எல்.சி நிறுவன தலைமை அலுவலகத்தை, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் முற்றுகையிட முயன்றனர்.
மேலும் ஊழியர்கள் ஒரு நாள் ஊதியமாக, 418 ரூபாய் பெற்று வரும் நிலையில், தற்போதைய விலைவாசி உயர்வினால், ஊதியம் பற்றாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், நிரந்தர வேலை கொடுத்தால் தங்களுக்கு நாள் ஒன்றுக்கு 800 ரூபாய் கிடைக்கும், ஆதலால் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். முற்றுகையின் போது முற்றுகையில் ஈடுபட்ட மக்களை, பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்த என்எல்சியின் உயர் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் ஒரு வார கால அவகாசம் தருமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.