மக்களவை தேர்தலையொட்டி நடந்த வாகன தணிக்கையின்போது பிடிபட்ட 1.50 கோடியை திரும்ப பெற்று தருவதாக, போலீசிடம் பணத்தை பறிகொடுத்த நபரிடமே மேலும் 36 லட்சத்தை அபகரித்த நபரை ஈரோடு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னை விருகம்பாக்கம் சேர்ந்த முகமது ரியாஜூதீன் சென்ற சில வருடங்களாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் சந்தோஷ்பால். கத்தார் நாட்டில் இவர் வசிக்கிறார். இந்த சந்தோஷ்பாலின் உறவினர் மாத்யூஸ். மகாராஸ்டிரா மாநிலம் புனேவில் இவருக்கு சொந்தமான இடத்தை விலை பேசி அதன் முன்பணமாக ரூ.1.50 கோடி ரூபாயை கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ந் தேதி ஒரு காரில் கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள மாத்யூவின் சகோதரர் வீட்டுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
அப்போது நடந்த மக்களவை தேர்தலையொட்டி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே வரும்போது ரூ.1.50 கோடி பணத்தை தனிக்கை செய்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக தனது நண்பரான காஞ்சிபுரம் மாவட்டம் நாவலுார் என்ற ஊரைச்சேர்ந்த வெங்கடேஷ் என்பவரிடம் சந்தோஷ்பால் தகவல் கூறி உள்ளார்.
அப்போது வெங்கடேஷ், ''தனக்கு மத்திய அரசு அதிகாரிகள் பழக்கம் உள்ளது, ஐஆர்எஸ் துறையில் பணியாற்றும் அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது. ஆகவே போலீஸ் பறிமுதல் செய்த பணத்தை அப்படியே மீட்டுக்கொடுக்கிறேன் என கூறியிருக்கிறார். பணத்தை அப்படியே திரும்ப பெற வேண்டும் என்றால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கு லஞ்சமாக பணம் தர வேண்டும், அதற்கு எவ்வளவு என பேசிவிட்டேன். குறைந்தது ரூ.35 லட்சம் கொடுக்கனும், இதை செய்து கொடுக்கிற எனக்கு ரூ.1 லட்சம் என்று கூறியிருக்கிறார்.
இதை அப்படியே நம்பிய ரியாஜூதீன், சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கி மூலம் ரூ.36 லட்சம் பணத்தை வெங்கடேஷின் கணக்கிற்கு அப்போது அனுப்பி வைத்துள்ளார். ரூ.36 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்ட வெங்கடேஷ் போலீசார் பறிமுதல் செய்த ரூ.1.50 கோடி பணத்தை பல மாதமாகியும் மீட்டுக்கொடுக்கவில்லை. மீட்பதற்காக கொடுக்கப்பட்ட ரூ.36 லட்சத்தையும் அவர்களுக்கு திரும்ப கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றியதோடு பல முறை பணத்தை கேட்டும் திருப்பிக்கொடுக்காமல் இருந்ததோடு தனது பவர் மத்திய அரசு வரை உள்ளது என்று கொலை மிரட்டலும் விடுத்து வந்துள்ளார் வெங்கடேஷ்.
இதை தொடர்ந்து ரியாஜூதீன் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் வெங்கடேஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த சென்னை சலீம் என்பவரையும் தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர். இந்த மோசடி பேர்வழி எத்தனை பேரை இதைப்போல ஏமாற்றினான் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வரும்.