பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அதனை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் காவல்துறை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளிகள், கல்லூரிகளில் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், அதில் தங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பது குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்துவருகின்றனர்.
அந்தவகையில் மத்திய மண்டல ஐ.ஜி. உத்தரவின்படியும், தஞ்சை சரக டி.ஐ.ஜி.யின் அறிவுறுத்தலின்படியும், மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளரின் வழிகாட்டுதலின்படியும், நன்னிலம் டி.எஸ்.பி. முன்னிலையிலும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல்துறை மற்றும் சைபர் கிரைம் சார்பில் நன்னிலம் பாரதிதாசன் பல்கலைகழக உறுப்புக்கல்லூரி மற்றும் பள்ளிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் பற்றிய பாதுகாப்பு குறித்தும் Cyber Crime Cell பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேசிய நன்னிலம் காவல்நிலைய ஆய்வாளர் சுகுணா, குழந்தைகளின் உரிமைகள், குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2006, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் மற்றும் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 குறித்தும், குடும்ப வன்முறை சட்டம், வரதட்சணை தடுப்பு சட்டம், பணித்தளத்தில் வேலை செய்யும் பெண்களுக்கான சட்டம் பற்றியும், Cyber Crime No 155260 பற்றியும் எடுத்துரைத்து விரிவாகப் பேசினார்.
"மற்ற வழக்குகளைவிட இதில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும். 2012ஆம் ஆண்டின் சட்டத்தின்படி நீதிமன்றம் வழக்கை எடுத்துக்கொள்ளுகிற 30 நாட்களுக்குள் குழந்தைகளிடமிருந்து வாக்குமூலம் பெறவேண்டும் என அறிவுறுத்துகிறது. ஆனால், பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் இதுபோன்ற வாக்குமூலம் பதியப்படுவதில் தாமதப்படுத்துவதும், வழக்கு பதிவிக்க கையூட்டு கேட்பதும், குற்றவாளிகளுக்கு சமரசம் பேச வாய்ப்பளித்துவிடுகிறது. இது குற்றங்கள் அதிகரிக்கவும் வழிவகுக்கிறது. சம்பிரதாய வழக்குகளைப் போலவே போக்சோவும் மாறிவிடாமல் வழிவகை செய்ய முயற்சிக்கவேண்டும். அதற்கு சட்டம் குறித்தான விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி பெண்பிள்ளைகளிடம் ஏற்படுத்துவது மிகஅவசியம். அதனை சிறப்பாக செய்துவரும் காவல்துறையினருக்கு பாராட்டுகள்" என்கிறார்கள் மாதர்சங்கத்தினர்.
"பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் 90 சதவீகித குற்றங்கள் மிக நெருக்கமானவர்காள் மூலமே நடக்கிறது" என்கிறது தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம்.
"அறிக்கையாலும், சட்டங்கள் போடுவது மட்டுமே சரியான வழிகாட்டுதல் ஆகிவிடாது. போதிய விழிப்புணர்வு தேவையிருக்கிறது. இன்றைய சூழலில் பல குழந்தைகள் இது போன்ற பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். எனவே இவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசு, நீதித்துறை காவல்துறை போன்ற அதிகார வர்க்கத்திடம் மட்டுமே இல்லாமல் சாமானிய மக்களிடம் உள்ளது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அரசின் கடமை. அதை இன்றைய காவல்துறையினர் சரியாக செய்துவருகின்றனர்" என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.