ஆன்மீகவாதி போர்வையில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிவசங்கர் பாபா மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பத்ம ஷேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் ராஜகோபாலன் எனும் ஆசிரியர், மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது, தகாத முறையில் நடந்துகொண்டது தொடர்பான புகார்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள், ஆசிரியர்களால் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளைப் புகார்களாக தெரிவித்துவருகின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துவருகின்றனர்.
முன்னாள் மாணவிகள் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரிக்க தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், நிறுவனர் சிவசங்கர், அவரின் வழக்கறிஞர் நாகராஜ், அதேபோல் பள்ளியின் தலைமை ஆசிரியர், மூன்று ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் அவர்கள் ஆஜராகினர். இதில் சிவசங்கருக்கு பதிலாக அவர் சார்பாக ஜானகி என்பவர் ஆஜராகினார்.
நெஞ்சுவலி காரணமாக 9ஆம் தேதியே டேராடூனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளனர் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று தனித்தனி புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தப் புகார்கள் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டும் பணியில் 3 தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.