விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள நெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான முனியப்பன். பட்டதாரியான இவரது மகன் விஜய்(23) என்கிற கார்த்தி நேற்று மதியம் 2:30 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் திருவக்கரை ரோஜா குட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பெரும்பாக்கத்தில் இருந்து திருவக்கரைக்கு நோக்கி சென்ற டிப்பர் லாரி ஒன்று கார்த்திக்கின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திக் உயிரிழந்தார். லாரியை ஓட்டிச் சென்ற புதுச்சேரி சோம்பட்டு பகுதியைச் சேர்ந்த தினகரன்(46) காயம் என்று தப்பினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வானூர் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் கார்த்திக் உடலை மருத்துவ பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கார்த்திக் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் இப்பகுதியில் அதிக அளவில் கல்குவாரிகள் இயங்கி வருவதால் அந்த குவாரிகளுக்கு ஜல்லி, கிராவல், எம்சாண்டல், ஏற்ற வரும் டிப்பர் லாரிகள் அதிவேகமாக செல்கின்றன. இப்படிப்பட்ட லாரிகளால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு மனித உயிர்கள் மாண்டு போகின்றன. எனவே அதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.
கோட்டகுப்பம் ஏ.எஸ்.பி பொறுப்பு அபிஷேக் குப்தா மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் திருப்தி அடையாத அப்பகுதி பொதுமக்கள் கார்த்திக் உடலை எடுத்துச் செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். மறியலில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, ஏ.டி.எஸ்.பி திருமால், டி.எஸ்.பி பார்த்திபன் உட்பட அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். அதிகாரிகள் அப்பகுதி மக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் இப்பகுதியில் 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே லாரிகள் செல்ல அனுமதிக்க வேண்டும். இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை உரிய அதிகாரிகளிடம் கூறி விரைவில் நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பிறகே கார்த்திக்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து வானூர் போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
சமீபத்தில் இதேபோன்று கருங்கல் ஜல்லி ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி மோதியதில் கேணிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தந்தை மகள் இருவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே திருவக்கரை ,வானூர், பகுதிகளில் கருங்கல் குவாரிகளுக்கு லோடு ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகளால் ஏற்படும் விபத்துக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.