உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடி எண் 161இல் வாக்களித்தார். கேரளா மாநிலம் ஆலப்புழாவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான கே.சி. வேணுகோபால் வாக்களித்தார். ராஜஸ்தான் மாநில பாஜகவின் மூத்த தலைவர் வசுந்தரா ராஜே சிந்தியா ஜலவாரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சுரேஷ் கோபி கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். எர்ணாகுளம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு பரவூரில் உள்ள வாக்குச் சாவடியில் கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் வாக்களித்தார். இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி பெங்களூருவில் உள்ள பி.இ.எஸ். வாக்குச்சாவடியில் வாக்களித்தார். எழுத்தாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சுதா மூர்த்தி பெங்களூருவில் வாக்களித்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே வந்து வரிசையில் காத்திருந்தார் நடிகர் பிரகாஷ்ராஜ். அதன் பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நரசிங்பூரில் மத்தியப் பிரதேச கேபினட் அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் வாக்களித்தார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பிஇஎஸ் வாக்குச்சாவடியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது தந்தையுடன் வந்து வாக்களித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் பெங்களூருவில் வாக்களித்தார்.