உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.