தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.
இதனிடையே, வெப்ப நிலை மற்றும் ஈரப்பதம் அதிகம் இருக்கும் பொழுது ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் வெப்ப அலை வீசுவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், குழுந்தைகள் மற்றும் கால்நடைகளை வெளியே அழைத்து வருவதை தவிர்க்குமாறும் மருத்துவர்கள் பலர் அறிவுறுத்துகின்றனர். இந்த வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும், முன்னெச்சரிக்கையாகவும் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைப் பின்வருமாறு காண்போம்.
வெப்பத்தைத் தனித்துக்கொள்ள தாகம் எடுக்கவில்லை என்றாலும், பொது மக்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். வெப்பத்தால் மயக்கம் ஏற்படும் ஆபத்து இருப்பதால் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதார குழுவினர் கூறுகின்றனர். ஒருவேளை அவசர வேளையாக வெளியே செல்ல நேரிட்டால், வெளியே செல்லும் போது கட்டாயம் தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர்.
அதே வேளையில், பாட்டிலில் வைக்கப்பட்டிருக்கும் குளிர்பானங்கள், தேநீர், காபி, மது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர். இது போன்றவற்றை தவிர்த்துவிட்டு மோர், எலுமிச்சை, தண்ணீர் போன்ற வீட்டில் செய்யக்கூடிய பானங்களைக் குடிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். இதனையடுத்து, நண்பகலில் அதிக உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகள் செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே வெளியே வேலை பார்ப்பவராக இருந்தால் குடையோ அல்லது தொப்பியோ இல்லாமல் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெப்ப அலை தாக்கத்தின் போது, புரதச் சத்து அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல் சோர்வுற்றாலோ அல்லது காய்ச்சல் ஏற்பட்டாலோ தாமதிக்காமல் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும் எனச் சுகாதார துறையினர் கூறுகின்றனர். மேலும், வளர்ப்பு பிராணிகள் மற்றும் கால்நடைகளை வெளியே கட்டி போடாமல் நிழலில் கட்டி வைக்க வேண்டும்.
அந்தப் பிராணிகளுக்கும் அதிக தண்ணீரை கொடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், வீட்டை அடிக்கடி தண்ணீர் மூலம் சுத்தம் செய்து குளிர்ச்சியாக வைக்க வேண்டும். இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பொது மக்கள் மேற்கொண்டால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்துகின்றனர்.