7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இதனையடுத்து, மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேசிய அவர், “மஜ்லிஸுக்கு பயந்து காங்கிரசும், டி.ஆர்.எஸ் கட்சியும் தெலுங்கானா விடுதலை தினத்தைக் கொண்டாடுவதில்லை. மஜ்லிஸுக்கு பயப்படாததால் தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாடுவோம் எனப் பா.ஜ.க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் மற்றும் டி.ஆர்.எஸ் இஸ்லாமியர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து செய்து பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பாஜக வழங்கும்.
காங்கிரஸும், டி.ஆர்.எஸ்.ஸும் ராமர் கோயில் கட்டுவதை ஒருபோதும் விரும்பவில்லை. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்துவிட்டு, காஷ்மீரை என்றென்றும் இந்தியாவுடன் ஒருங்கிணைத்தார் நரேந்திர மோடி. மத்திய பாஜக தலைமையிலான அரசு, 10 ஆண்டுகளில், நீண்ட காலமாக நாட்டில் நிலவி வந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் மூலம், காஷ்மீரை நாட்டோடு என்றென்றும் ஒருங்கிணைத்துவிட்டார் மோடி. ரகுநந்தன் ராவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் மோடியை மீண்டும் பிரதமராக்க உதவும்” என்று கூறினார்.