கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.
கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தமன்னாவிற்கு வருகிற 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.