
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உள்ள வீ. புதுப்பாளையம் ஊர் சுடுகாடு அருகே நேற்று முன்தினம் (07.11.2021) இரவு 10 மணி அளவில் ஒரு பெண்ணின் கதறல் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அந்த வழியாகச் சென்றவர்கள் பெண்ணின் அபயக்குரல் கேட்டு ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது வாலிபர் ஒருவர் அந்தப் பெண்ணின் கழுத்தைக் கத்தியால் அறுத்தும் துப்பட்டாவால் அந்தப் பெண்ணின் கழுத்தில் இறுக்கியும் கொலை செய்ய முயன்றுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அங்கிருந்தபடியே கண்டாச்சிபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். அங்கிருந்து உதவி ஆய்வாளர் அன்பழகன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு சென்ற அவர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு கண்டாச்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அந்தப் பெண் அங்கே சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும் அங்கிருந்த மணிகண்டன் என்பவரை காவல்துறையினர் பிடித்தனர்.
பிடிபட்ட மணிகண்டனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், கழுத்தறுக்கப்பட்ட பெண், சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவரது மனைவி காயத்ரி (27) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவருக்கும் கார்த்தி என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. தற்போது அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
காயத்ரி - கார்த்தி திருமணம் நடப்பதற்கு முன்பு காயத்ரியின் தாய்மாமன் மகனான விழுப்பூரம் மாவட்டம், கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25), அவரை ஒருதலையாக காதலித்துவந்துள்ளார். இந்நிலையில், காயத்ரிக்கும் சென்னையைச் சேர்ந்த கார்த்தி என்பவருக்கும் திருமணம் முடிந்து அவர்கள் சென்னையில் வசித்துவந்தனர்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, காயத்ரி தனது தாய் வீடான ஒட்டம்பட்டு கிராமத்திற்கு வந்தபோது அங்கு தற்செயலாக வந்திருந்த மணிகண்டனை சந்தித்து பேச நேர்ந்திருக்கிறது. அப்போது அவர்கள் இருவரும் மனம்விட்டு பேசியுள்ளனர். அதில் அவர்கள் இருவருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டு, அது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதனால் காயத்ரி, அடிக்கடி தனது தாய்வீடான ஒட்டம்பட்டு கிராமத்திற்குச் செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு மணிகண்டனுடன் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஊர்சுற்றியும் தனிமையிலும் இருந்துவந்துள்ளார். சென்னையில், காயத்ரியின் கணவர் கார்த்தி வேலைக்குச் சென்றபிறகு அங்கு செல்லும் மணிகண்டனுடன் சொந்த வீட்டிலேயே தனிமையிலும் இருந்துள்ளார்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு தாய்வீடான ஒட்டம்பட்டு கிராமத்திற்கு வந்த காயத்ரி, மணிகண்டனுடன் அவ்வப்போது தனிமையில் இருந்துவந்துள்ளார். அப்படி நேற்று முன்தினம் ஒட்டம்பட்டு காப்புக்காட்டிற்குச் சென்று இருவரும் தனிமையில் இருந்துவிட்டு கண்டாச்சிபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது புதுப்பாளையம் கிராமத்தில் சுடுகாடு அருகில் வந்தபோது காயத்ரி, மணிகண்டனிடம், “நீண்ட நாள் நான் இங்கு இருந்தால், எனது கணவர் என் மீது சந்தேகப்படுவார். மேலும் எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன. அதனால் நான் சென்னைக்குச் சென்று கணவரைப் பார்க்க வேண்டும்; அவரோடு வாழ வேண்டும். வேண்டுமானால் நாம் சந்தர்ப்பம் கிடைக்கும்போது சந்தித்துக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.
அப்போது மணிகண்டன், “உன்னை விட்டுவிட்டு என்னால் இருக்க முடியாது. நீ என்னை விட்டுவிட்டு சென்னைக்குப் போகக்கூடாது. இனிமேல் நாம் இருவரும் சேர்ந்து வாழ்வோம். என்னுடன்தான் நீ வாழ வேண்டும்” என வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், அந்த இடத்திலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு சாவிக்கொத்தில் இருந்த சிறு கத்தியால் காயத்ரியின் கழுத்தை அறுத்துள்ளார். அப்போது வலி தாங்க முடியாமல் காயத்ரி சத்தம் போட்டுள்ளார். சத்தம் வெளியே வராமல் இருப்பதற்காக காயத்ரியின் துப்பட்டாவை எடுத்து அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் பெண்ணின் அபயக்குரல் கேட்டு ஓடிச் சென்று காப்பாற்றியுள்ளனர். இவ்வாறு மணிகண்டன் போலீசாரிடம் விவரித்துள்ளார். இதையடுத்து கண்டாச்சிபுரம் உதவி ஆய்வாளர் அன்பழகன், மணிகண்டன் மீது வழக்குப் பதிவுசெய்து சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.