விழுப்புரம் அருகே உள்ளது வளவனூர் காவல் நிலையம். இந்தக் காவல் நிலையத்திற்கு நேற்று (13.12.2021) ஒரு மர்ம நபர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் ப. வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த 50 வயது மாதவராஜ் என்பது தெரியவந்தது. இந்நிலையில், அவரிடம் வளவனூர் காவல் நிலைய ஆய்வாளர் தீபா தொலைபேசி மூலம் விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது மாதவராஜ், “நான் வளவனூர் காவல் நிலையத்திற்கு மட்டுமல்ல விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் வெடிகுண்டு வைத்துள்ளேன் இன்னும் சற்று நேரத்தில் அதுவெடித்துச் சிதறப் போகிறது” என்ற அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார், காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அப்படி வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆய்வாளர் தீபா, உதவி ஆய்வாளர் தமிழ்வாணன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று மாதவராஜை நேரில் அழைத்துவந்து விசாரணை செய்தனர்.
அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். போலீசாரிடமும் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. மேலும் இவர், சில தினங்களுக்கு முன்பு மினரல் வாட்டர் கம்பெனிக்குச் சென்று இலவசமாக வாட்டர் கேன் கேட்டபோது, அந்தக் கம்பெனி ஆட்கள் தர மறுத்தனர். அப்போது அந்தக் கம்பெனிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்து கைது செய்துள்ளனர். காவல் நிலையத்திற்கும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.