திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியில் பல்வேறு இடங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா விற்பனை நடைபெறுவதாக தொடர்ந்து புகார் வந்த நிலையில், வையம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் வினோத்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் குட்கா விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களை காவல்துறையினர் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் மணப்பாறை – அமையபுரம் சாலையில் கரும கவுண்டம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் நிறுத்தியுள்ளனர். ஆனால் போலீசாரை கண்டதும் இருசக்கர வாகனம் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. பின்னர் போலீசார் இருசக்கர வாகனத்தை துரத்திப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இருசக்கர வாகனம் ஒட்டி சென்ற நபர் வையம்பட்டியை அடுத்த நடுப்பட்டியை சேர்ந்த சரவணகுமார் (எ) போஸ் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மணப்பாறையில் இருந்து குட்கா விற்பனைக்காக எடுத்து செல்வதாகவும் போலீசாரை கண்டதும் பயத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாகவும் கூறியுள்ளார்.
பின்னர் அவரிடம் இருந்த பல வகை போதைப் பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் வையம்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்து சரவணகுமார் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.