வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே அரவட்லா பகுதியைச் சேர்ந்தவர்கள் சின்னு - கோவிந்தன் தம்பதியர். இந்த நிலையில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சின்னுவுக்கு கடந்த 27ஆம் தேதி இரவு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அதன் பின் குழந்தை நல வார்டுக்கு, தாயும் குழந்தையும் மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் சின்னுவின் கணவர் உணவு வாங்கி கொடுத்துவிட்டு வார்டுக்கு வெளியே சென்ற நிலையில் சின்னு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, குழந்தை அழுததாகச் சொல்லப்படுகிறது. அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் குழந்தையைப் பார்த்துக் கொள்வதாகக் கூறி சின்னுவிடம் குழந்தையை வாங்கி அழுகை நிறுத்த தாலாட்டு பாடியுள்ளார். இதனால் தாய் சின்னு மீண்டும் சாப்பிடத் தொடங்கியுள்ளார்.
ஆனால் கொஞ்ச நேரத்தில் அந்த பெண் குழந்தையுடன் காணாமல் போய் உள்ளார். எங்குத் தேடியும் கிடைக்காததால் தன் குழந்தை கடத்தப்பட்டதை அறிந்து அந்த தாய் கதறி அழுத்துள்ளார். உடனே இதுபற்றி மருத்துவமனையில் இருக்கும் புறக்காவல் நிலையத்தில் உள்ள காவலருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனே உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கூறியுள்ளனர்.
முதல் கட்டமாக வேலூர் கிராமிய காவல்நிலைய ஆய்வாளர் சுபா விசாரணைத் தொடங்கினார். குழந்தை கடத்தல் குறித்து காவல்துறையினர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பெண் கட்டை பையில் வைத்து குழந்தையைக் கடத்தி சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலமாகியது. இதனைத் தொடர்ந்து விசாரணையைத் தீவிரப்படுத்திய நிலையில், குழந்தையைக் கடத்திச் சென்ற மூன்று பேரைக் கர்நாடகா மாநிலத்தில் வைத்து வேலூர் மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்களின் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.