கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது வடப்பொன்பரப்பி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையம் பின்புறம் கடந்த 3ம் தேதி காலை நபர் ஒருவர் கழுத்து உடல் பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதாக வடபொன்பரப்பி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் டி.எஸ்.பி பார்த்திபனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு வந்த டிஎஸ்பி உயிரிழந்த நபரின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உடனடியாக குற்றவாளியை கைது செய்ய வேண்டும் எனக்கூறி, திருக்கோவிலூர் டி.எஸ்.பி பார்த்திபன் மேற்பார்வையில் சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் தலைமையில் குற்றப்பிரிவு போலிசார் உட்பட 20 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.
முதலில் திருமணத்தை மீறிய உறவால் இந்த கொலை நடந்திருப்பதாக தகவல் வெளியான நிலையில் போலீசார் அது குறித்த கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் உயிரிழந்த நபர் குறித்தும் அவர் கடைசியாக பேசியது யார் என்பது குறித்தும் அவரது செல்போன் என் வைத்து விசாரணையை தனிப்படை போலீசார் மேற்கொண்டனர். இந்த விசாரணையில் குற்றப்பிரிவு போலிசார் கொலை நிகழ்ந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது உயிரிழந்த வெங்கடேசன் அவரது இரு சக்கர வாகனத்தில் வேறொரு நபர் ஓட்டிச் செல்ல பின்னால் மதுபோதையில் அமர்ந்து சென்று கொண்டிருப்பது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சி ஒன்றில் பதிவாகி இருந்தது.
இதன் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த வெங்கடேசன் உடன் சென்றவர் அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன்(27) என்பதும், இவர் மற்றும் இவரது தந்தை பெங்களூரில் காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்து வந்ததும் கடந்த நான்கு மாதங்களாக தமிழ்ச்செல்வன் வேலையின்றி சொந்த ஊரில் சுற்றித்திரிந்ததும் தெரிய வந்தது.
பின்னர் தமிழ்ச்செல்வன் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் தற்போது பெங்களூருக்கு சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் பெங்களூருவில் தலைமறைவாக இருந்த தமிழ்ச்செல்வனை சந்தேகத்தின் பேரில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் வேலை இன்றி நான்கு மாதங்களாக வீட்டில் இருந்ததாகவும், கையில் பணம் இல்லாததால் தனியார் நிதி நிறுவனங்களில் வேலை செய்த தனது நண்பர்களிடம் பணம் பெற்றதாகவும் அந்தப் பணத்தை திரும்ப கட்ட முடியாததால், நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். பின்னர் பணத்தை செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வழிப்பறியில் ஈடுபடும் நோக்கில், கையில் கத்தியுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக மது போதையில் வெங்கடேசன் வருவதைப் பார்த்ததால், ஏற்கனவே இருவருக்கும் பழக்கம் இருந்ததால் அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி பறிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் அருகாமையில் உள்ள அரசு மதுபான கடையில் மதுவை வாங்கி கொடுத்து வெங்கடேசனை மீண்டும் போதையாக்கி, போதையின் உச்சத்தில் இருந்த வெங்கடேசனை இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு இரவு நேரம் வரும்வரை அந்த பகுதியிலேயே சுற்றித் திறந்து உள்ளார். பின்னர் மாலை 7 மணி அளவில் வடப்பொன்பரப்பி ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் உள்ள காப்பு காட்டு பகுதியில் வெங்கடேசன் அழைத்துச் சென்று கீழே தள்ளி போதையில் இருந்த அவரை, தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முற்பட்டுள்ளார்.
மது போதையில் இருந்த வெங்கடேசன் தமது கழுத்தை அறுத்த தமிழ்செல்வனின் வலது கையைப் பிடித்து கடித்துள்ளார். பின்னர் அவரை எட்டி உதைத்து கீழே தள்ளி, வெங்கடேசனின் கழுத்து, மார்பு, கை, கால்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த வெங்கடேசனை அங்கேயே விட்டுவிட்டு அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றதாக போலீசாரின் விசாரணையில் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த தங்கச் சங்கிலி மற்றும் வெங்கடேசனை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
ஒரு வார காலமாக கொலை வழக்கில் பல்வேறு கோணங்களில் 10க்கு மேற்பட்ட நபர்களை விசாரணை செய்து இறுதியாக உண்மை குற்றவாளியை தட்டி தூக்கிய தனிப்படை போலீசாருக்கும் தலைமை தாங்கிய டிஎஸ்பி பார்த்திபனையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினர்.