


மறித்த போலீஸ்.... 'பொலிரோ'வை நிறுத்திவிட்டு டிரைவர் ஓட்டம்...
திருச்சி விமான நிலையம், கே.கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் ரேஷன் கடைகளிலிருந்து அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் தொடர்ந்து ரோந்து செல்வது, வாகன சோதனை செய்வது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று காலை வாகன சோதனையின்போது ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பொலிரோ வாகனம் சென்று கொண்டு இருந்தது. அதை நெடுஞ்சாலை போலீஸார் சோதனை செய்ய நிறுத்தினர்.
அப்போது வாகனத்தின் ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார். பின்பு வாகனத்தைச் சோதனை செய்தபோது அந்த வாகனத்தில் ரேஷன் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்படும் நான்கு மூட்டை அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இருந்தது.
உடனடியாக அந்த பொருட்களையும் வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல் துறையினர், அதை குடிமைப்பொருள் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குடியுரிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.