ஆத்தூர் அருகே, தனது மூன்றாவது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர், மண்வெட்டியின் கைப்பிடியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் அகரம்புதூரைச் சேர்ந்தவர் சிங்காரம் (60). கூலித்தொழிலாளி. இவருடைய முதல் மனைவி திருமணமான ஓரிரு மாதத்திலேயே சிங்காரத்தைப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அவர் இரண்டாவதாக பெரியம்மாள் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் பிறந்தனர். பெரியம்மாளும் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இதையடுத்து மூன்றாவதாக அகரம்புதூரைச் சேர்ந்த சுமதி (40) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தங்கம் (21), வேலு (19), சக்தி (13) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
சொந்த ஊரில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் சிங்காரம், ஆத்தூர் கொட்டாம்பாடியில் உள்ள மோகனசுந்தரம் என்பவரின் பண்ணையில் வேலைக்குச் சேர்ந்தார். மனைவி, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அதே பண்ணைக்குச் சொந்தமான நிலத்திலேயே குடிசை வீடு கட்டி குடியேறினார்.
இந்நிலையில் சுமதிக்கு, அங்கு பண்ணைக்கு வேலைக்கு வரும் ஆண்கள் சிலருடன் தவறான தொடர்பு இருப்பதாக சிங்காரம் சந்தேகப்பட்டார். அது தொடர்பாக அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 22, 2019) அதிகாலை 5 மணியளவில், கணவன், மனைவி இருவரும் பசுமாடுகளிடம் பால் கறப்பதற்காக குவளைகளுடன் கொட்டகைக்கு வந்துள்ளனர். அப்போதும் அவர்கள் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரம் அடைந்த சிங்காரம், கீழே கிடந்த மண்வெட்டியின் மர கைப்பிடியை எடுத்து சுமதியின் தலையில்
பலமாக தாக்கினார். அடுத்தடுத்து தாக்கியதில் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. இந்த தாக்குதலில் சுமதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். மனைவியை கொன்றுவிட்டு சிங்காரம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
வீட்டில் இருந்து எழுந்து வந்த மூன்று பிள்ளைகளும் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடக்கும் தாயைப் பார்த்து அலறித்துடித்தனர். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள், தலைவாசல் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
டிஎஸ்பி பொன்கார்த்திக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் சம்பவம் இடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். சடலத்தை, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான சிங்காரத்தை தேடி வருகின்றனர்.