பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி விதிப்பைக் கைவிட வேண்டும், தொழிலாளர்களுக்கு விரோதமான 4 சட்டத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி சம்பளத்தை இரட்டிப்பாக்கி நகர்ப்புறத்திற்கு விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தியா முழுவதும் மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்றன. தொழிலாளர் முன்னேற்ற சங்கம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன.
அந்தவகையில் திருச்சியில் நடந்த மறியல் போராட்டத்தில் தொழிலாளர்கள் உட்பட 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தெப்பக்குளம் தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உட்பட 600 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.