கோவை, கருமத்தம்பட்டியை அடுத்த சோமனூர் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த ஆரோக்கியராஜ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் நேற்று (30.07.2021) சோமனூர் பகுதியில் கருமத்தம்பட்டி உதவி ஆய்வாளர் அழகேசன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த வடமாநில வாலிபரை நிறுத்தி நடத்தப்பட்ட விசாரணையில், முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார். இதனையடுத்து அந்த நபர் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் குட்கா பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவன் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜித்தேந்திரகுமார் என்பதும் சோமனூர் பகுதியில் உள்ள குடோனில் இருந்து விற்பனைக்காக கொண்டு செல்வதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை அழைத்துக்கொண்டு அந்தக் குடோனுக்குச் சென்றனர்.
அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 550 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், அந்தக் குடோனை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகா சிவசக்தி ஜெனரல் ஸ்டோர் உரிமையாளர் வாடகைக்கு எடுத்து பயன்படுத்திவருவதும், மகா சிவசக்தி உரிமையாளர் மோதிலால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குட்கா பொருட்களைப் பதுக்கிவைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அங்கு பணிபுரிந்துவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜித்தேந்திர குமார் (24), உத்தம் குமார் (21), பிரேம் சிங் (20) ஆகிய மூவரையும் கருமத்தம்பட்டி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.