திருச்சி மாவட்டம் இருங்களூர் பகுதியில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி போலி மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக திருவரம்பூர் மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் திருவரம்பூர் மதுவிலக்கு பிரிவு துணை கண்காணிப்பாளர் முத்தரசு தலைமையிலான காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த பகுதியை சேர்ந்த லாரன்ஸ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 90 அட்டைப் பெட்டிகளில் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான 4310 போலி மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலி மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் லாரன்ஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு லாரன்ஸ் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடையில் பறிமுதல் செய்யப்பட்ட போலி மது பாட்டில்களை, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் முத்தரசு மேற்பார்வையில் மதுபானங்கள் அனைத்தையும் அழிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.