சென்னை அம்பத்தூரை அடுத்த நொளம்பூர் சர்வீஸ் ரோடு பகுதியில் வஜ்ரா என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. சுமார் 150 வீடுகளுக்கு மேல் உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான ஜெய்சிங் என்பவர் வசித்து வருகிறார். 62 வயதான இவர் திருவள்ளூரில் உள்ள தொழிலாளர்கள் நலத்துறையில் பணிபுரிந்தவர்.
இந்நிலையில், வஜ்ரா குடியிருப்பு நல சங்க செயலாளர் அப்பாஸ் என்பவர் ஜெய்சிங் மீது சேப்பாக்கத்தில் உள்ள மதுவிலக்கு மற்றும் கலால் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், ''ஜெய்சிங் தனது வீட்டில் சட்டவிரோதமாக சுமார் 200க்கும் மேற்பட்ட உயர் ரக அயல்நாட்டு மதுபானங்களைப் பதுக்கி வைத்துள்ளார். அந்த மதுபாட்டில்களை விடுமுறை நாட்களில் விற்பனை செய்து வருகிறார்.
இதனால், இந்த வஜ்ரா குடியிருப்பு பகுதியில் வெளிநபர்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இத்தகைய தவறான செயல்களில் ஈடுபடும் ஜெய்சிங் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும்.'' எனத் தெரிவித்திருந்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் மதுவிலக்கு மற்றும் கலால் பிரிவு போலீசார் ஜெய்சிங் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டுக்குள் இருக்கும் ஒரு அறையில் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் பார் செட் அமைத்தது போல் மதுபாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் ஜெய்சிங் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட உயர் ரக வெளிநாட்டு மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். பின்னர் ஜெய்சிங்கை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.