வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு சுமார் 12 மணி அளவில் சீனிவாசன் என்பவர் செல்போனில் பேசியபடி சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்பாக ஒரு கார் வந்து நின்றுள்ளது. அதிலிருந்து இறங்கிய ஒருவன் சீனிவாசனுடைய செல்போனை பறித்துக் கொண்டு காரில் ஏறி தப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனை சிசிடிவி காட்சி வழியாக கண்காணித்த காட்பாடி காவல்துறையினர் உடனடியாக இரண்டு இருசக்கர வாகனத்தில் 4 போலீசார், செல்போன் பறித்துச் சென்ற காரை துரத்திச் சென்று கரசமங்கலம் கூட்ரோடு பகுதியில் மடக்கிப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. காரில் இருந்த நான்கு பேரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.
காட்பாடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் செல்போன் பேசிக்கொண்டு நடந்து செல்பவர்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு காரில் தப்பிச் செல்வது தெரிய வந்தது. இதனை அடுத்து குற்றவாளிகளான ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியைச் சேர்ந்த நக்கா வெங்கடேஷ் (22), மேகல் சாய் (25), பனாசு பாலாஜி (20), கம்மதம் டேவிட் (35), ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் காட்பாடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
அவர்களிடமிருந்து 15 செல்போன்கள் மற்றும் ஒரு ஆடம்பர காரை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் 200க்கும் மேற்பட்டவர்களிடம் செல்போன்களை பறித்துச் சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. அதனையும் பறிமுதல் செய்ய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.