கடந்த அதிமுக ஆட்சியில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ். அவர், அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணத்தை கவனித்துக் கொண்டார். அப்போதைய முதல்வருடன் டெல்டா மாவட்டத்துக்கு பாதுகாப்பு பணியை மேற்கொள்ள ராஜேஷ் தாஸ் உடன் சென்றிருந்தார். அப்போது, மரியாதை நிமித்தமாக டெல்டா மாவட்டத்தில் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவர் ராஜேஷ் தாஸை சந்தித்துள்ளார். ஆனால், அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராஜேஷ் தாஸ் காரில் வைத்து பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதைச் சற்றும் எதிர்பாராத அந்த பெண் எஸ்பி புகார் அளிக்க சென்னை சென்றார். அப்போது, வழியில் மறித்த அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன் ராஜேஷ் தாஸுக்கு ஆதரவாக சமாதானம் பேசி பெண் எஸ்பியிடம் கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளார். இப்படி, பல மிரட்டலையும் மீறி பாலியல் தொல்லைக்கு ஆட்பட்ட பெண் எஸ்பி, அப்போதைய டிஜிபி திரிபாதியைச் சந்தித்து தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து துணிச்சலுடன் புகார் அளித்தார். இதையடுத்து, ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில், பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியை தடுத்து புகார் அளிக்க இடையூறு செய்த அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி கண்ணனுக்கு 500 ரூபாய் மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றமும் ராஜேஷ் தாஸுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால், ராஜேஷ் தாஸ் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும், சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல்துறையினர் குடிமக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், ராஜேஷ் தாஸ் காவல்துறையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறார். இதன் காரணமாக, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், ராஜேஷ் தாஸ் சிறை செல்வது உறுதியானது. இதையடுத்து, வழக்கை விசாரணை செய்து வந்த சிபிசிஐடி போலீஸார் பாலியல் குற்றவாளி ராஜேஷ் தாஸை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, தண்டனை தீர்ப்பு உறுதியான பிறகு ராஜேஷ் தாஸ் வடமாநிலங்களில் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்பட்டது. அவரை பிடிக்க போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அவரைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது தண்டனை உறுதியானதால் ராஜேஷ் தாஸ் எங்கு இருக்கிறார் என்று தனிப்படை போலீஸார் விசாரணை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் சரண் அடையலாம் என்றும், அப்படி இல்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, ராஜேஷ் தாஸ் வழக்கு குறித்து சட்ட நிபுணர்களுடனும், காவல்துறை உயரதிகாரிகளுடனும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, போலீசாரின் தேடுதல் வேட்டை தீவிரமடைந்திருப்பதால் ராஜேஷ் தாஸ் தலைமறைவாக இருந்தாலும், கைது செய்யப்படுவார் என சிபிசிஐடி காவல் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.