பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (வயது 52) கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை வழக்கில் அண்மையில் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன் மற்றும் அவருடைய தந்தை நாகேந்திரனும் கைது செய்யப்பட்டிருந்தனர். அஸ்வத்தாமன் நீதிமன்ற காவலில் இருக்கும் நிலையில் வேலூர் சிறையில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ரவுடி நாகேந்திரனை காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் போலீசார் அனுமதிகேட்ட நிலையில் மூன்று நாட்கள் அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரவுடி நாகேந்திரனை வேலூர் சிறையில் வைத்து போலீசார் கைது செய்ய முயன்றபோதே கைதுக்கான வாரண்டில் கையெழுத்திட நாகேந்திரன் மறுத்ததாக தகவல் வெளியாகி இருந்தது. அதேபோல் நீதிமன்றத்தில் போலீஸ் கஸ்டடியில் செல்வதற்கு நாகேந்திரன் மறுப்பு தெரிவித்து முறையிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது போலீஸ் காவலில் உள்ள ரவுடி நாகேந்திரன் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனக்கு வாரத்திற்கு இரு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும் எனக் கூறி போலீஸ் காவலில் செல்ல மறுத்த நாகேந்திரனை, மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அனுமதியுடன் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டும் எந்த ஒரு தகவலையும் நாகேந்தினிடம் இருந்து பெற முடியவில்லை; தொடர்ந்து ஒத்துழைப்பு தராமல் மௌனம் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. 'தனக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை' என்பதை மட்டும் அவர் தொடர்ந்து கூறி வருவதாகவும் கூறப்படுகிறது.