நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில், இன்று தமிழகத்தின் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர். அதன்படி நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடக்கூடிய பாஜக வேட்பாளர் எல். முருகன் மற்றும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் இருவரும் இன்று ஒரே நாளில் உதகையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கு முன்பாக எல். முருகன் வேட்புமனு தாக்கல் செய்ய 11 மணி முதல் 12 மணி வரை நேரம் ஒதுக்கித் தர கேட்டிருந்தார். அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
அதேபோன்று அதிமுக வேட்பாளருக்கும் அதற்கு அடுத்த நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் எல். முருகனும், பாஜக நிர்வாகிகளும் கோவில்களுக்குச் சென்றுவிட்டு தாமதமாக 12 மணிக்கு உதகை ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்துள்ளனர். இதனிடையே எல்.முருகன் தாமதமாக வந்ததால் அந்த பகுதியில் ஆயிரக்கணக்கில் பாஜக மற்றும் அதிமுக தொண்டர்களும் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில், பாஜக வேட்பாளர் தாமதமாக வந்து எங்கள் நேரத்தில் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர் என்று அதிமுகவினர் வாக்குவாதம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பாஜக - அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே பாஜவினர் பேரணி செல்வதால் சற்று நின்று செல்லுமாறு காவல்துறையினர் அதிமுகவினரிடம் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதிமுகவினர் அதனைக் கேட்காமல் போலீசாரின் தடுப்புகளை மீறிச் சென்றதால் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த காவல் கண்காணிப்பாளர் வாகனத்தை மறித்து அதிமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.