18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதாவது கடந்த 27 ஆம் தேதி (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின.
அதனைத் தொடர்ந்து ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நேற்று முன்தினம் (28.04.2024) நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் நேற்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. அதோடு ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எந்திரங்கள் உள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவுக்கான தொலைக்காட்சியில் இன்று (30.04.2024) காலை 9 மணியளவில் பழுது ஏற்பட்டது. இதனையடுத்து தொழில்நுட்ப வல்லுநர்களால் சில நிமிடங்களில் இந்த பழுது சரி செய்யப்பட்டது.
இதற்கிடையே தேனி வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ராஜேஷ் கண்ணன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தேனி கொடுவாரூரியில் உள்ள கம்மவார் சங்கம் கல்லூரி அருகில் பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கல்லூரி வளாகத்திற்குள் ராஜேஷ் நேற்று (29.04.2024) இரு சக்கர வாகனத்தில் அத்துமீறி நுழைய முயன்றுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தியபோது காவலர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக கொடுவிலார்பட்டி வி.ஏ.ஓ. மதுக்கண்ணன் அளித்த புகாரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் கண்ணனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேஷ் கண்ணன் சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. தேனி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச் செல்வனும், அதிமுக சார்பில் வி.டி. நாராயனசாமியும், பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும், நாம் தமிழர் கட்சி சார்பாக மதன் ஜெயபாலும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.