காவல்துறையின் அமலாக்கப் பிரிவு, பிரபல முகநூல் குழுமமான ‘படைப்புக் குழும’த்துடன் இணைந்து ‘கோப்பையில் நுரைக்கும் விஷம்’ என்ற தலைப்பில் அணமையில் கவிதைப் போட்டி ஒன்றை நடத்தியிருக்கிறது.
பிரபல கவிஞரான மு.மேத்தா இந்தக் கவிதைப் போட்டிக்கு நடுவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். வெற்றி பெறும் கவிஞர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன. இந்தக் கவிதைப் போட்டியில் ஏராளமான கவிஞர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
காவல்துறை எப்படி கவிதைப் போட்டியை நடத்துகிறது? என்று விசாரித்த போது, இதற்குக் காரணமானவர் அமலாக்கத்துறை எஸ்.பி.யான மணிதான் என்றார்கள். அவரைப்பற்றி மேலும் விசாரித்தபோது ஆச்சரியமூட்டும் தகவல்கள் கிடைத்தன.
கடலூரைச் சேர்ந்தவரான மணி, இளமையிலேயே இலக்கிய ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். சிறந்த பேச்சாளரான இவர், ’வாரத்தின் எட்டாவது நாள்’, ’வெயிலில் நனைந்த மழை’, ’நெற்றி சுருக்கிய புத்தர்’ உள்ளிட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறாராம். அண்மையில் ’கன்னத்துப்பூச்சி’ என்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதை நூல் ஒன்றும் புதிதாக வெளிவந்திருக்கிறது.
அண்மையில் சென்னையில் நடந்த 43 ஆவது புத்தகத் திருவிழாவில் இந்த நூலை கவிஞர் கலாப்பிரியா வெளியிட்டிருக்கிறார். இந்த விழாவில் பேசியவர்கள் ”இந்த அமலாக்கத்துறை அதிகாரி எழுதும் கவிதைகள் மிகுந்த போதையை ஏற்படுத்துகிறது. இவர் தரும் போதை மனதைத் தெளியவைக்கும் வித்தியாசமான போதை” என்று வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள்.
-நாடன்
பதிவு: கதிரவன்