ஆடு வளர்ப்பது தொடர்பான பிரச்சனையும், கொடுக்கல் வாங்கல் தகராறும் இருக்க ஆட்டுவியாபாரிக்கு சாதகமாக பொய் வழக்குப் போட்டு சிறைக்கு அனுப்பிய காவல்துறையை கண்டித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலேயே விஷம் அருந்திய வாலிபர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை இடையன்குடி சாலைப் பகுதியை சேர்ந்த ஜெனிபர் என்ற வாலிபர், மடத்தச்சம்பாட்டைச் சேர்ந்த செல்லபாண்டி எனும் ஆட்டு வியாபாரிடம் சென்று, தன்னை "குட்டம் போலீஸ்" என அறிமுகப்படுத்தி ரூ.15 ஆயிரம் பணம் பறிக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்து கடந்த வாரத்தில் சிறைக்கு அனுப்பி வைத்தனர் திசையன்விளை போலீஸார். தினசரி சம்பந்தப்பட்ட ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜெனிபருக்கு ஜாமீன் வழங்கப்பட, ஞாயிற்றுக்கிழமையன்று திசையன்விளை காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தவர், " ஆடு வியாபாரி செல்லப்பாண்டிக்கும் திசையன்விளை வடக்கு தெருவை சேர்ந்த ஆனந்தபுஷ்பம் என்பவருக்கும் ஆடு வாங்கி வளர்ப்பது தொடர்பாக பிரச்னை உள்ளது. ஆனந்தபுஷ்பத்திடம் வாங்கிய ஆட்டுக்கான பணம் 15 ஆயிரம் ரூபாயை செல்லப்பாண்டி கொடுக்க வேண்டும். இதை கேட்கப் போன என்மீது பொய்வழக்குப் போட்டுள்ளீர்கள். மிகவும் அவமானமாக உள்ளது." எனக் கூறிக்கொண்டே கையில் கொண்டு வந்த விஷத்தை அருந்தினார்.
போலீஸார் ஜெனிபரை மீட்டு முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க, விஷத்தின் வீரியம் அதிகமாக பரவியதாக மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.