![Poison](http://image.nakkheeran.in/cdn/farfuture/4mwR4qfQss6zJZEw_0_aHJkczTsMIxkSp_WTOoF_3RY/1533347632/sites/default/files/inline-images/Poison%20330_0.jpg)
மகன் காதல் திருமணம் செய்ததால் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எப்போதும் வென்றான் பகுதியை சேர்ந்தவர்கள் பத்மநாபன் - சண்முகலட்சுமி தம்பதியினர். இவர்கள் அதே பகுதியில் மதுரை சாலையில் ஓட்டல் நடத்தி வந்தனர். இவர்களுக்கு 24 வயதில் மணிகண்டன் என்ற மகன் உள்ளார். அவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 26-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பத்மநாபனும், சண்முகலட்சுமியும் விஷம் குடித்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்பத்மநாபனும், சண்முகலட்சுமியும் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து எப்போதும் வென்றான் போலீசார் விசாரணை நடத்தினர். மணிகண்டனுக்கும் கோவில்பட்டி அருகே உள்ள குமாரபுரம் பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (24) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். திருமணத்துக்கு மணிகண்டனின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 25-ந் தேதி மாரியம்மாளை ஒரு கோவிலில் வைத்து மணிகண்டன் திருமணம் செய்து கொண்டார். இதனால்தான் பத்மநாபனும், சண்முகலட்சுமியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.