![PM's housing scheme... sued on 18 persons!](http://image.nakkheeran.in/cdn/farfuture/mUOBPyv_FSUJvUxjCu_qobFFSv08kmsUZtCyesfm4aw/1626596874/sites/default/files/inline-images/inci.jpg)
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக மூன்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 10ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியில் குடிசை பகுதியில் அய்யம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்த வீடு மழையில் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அய்யம்மாள் இடிபாட்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் வீட்டில் இருந்த சிறுவன் ராகுல் காந்தி தப்பித்தார்.
அய்யம்மாளுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நிதி அவருக்கு சென்று சேராத நிலையில் மூதாட்டிக்கு வீடு கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஊராட்சி செயலாளர் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் ஆலங்காயம் ஊராட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் 2017 மற்றும் 18 ஆம் ஆண்டு பயனாளிகள் பட்டியலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் உயிரிழந்த அய்யம்மாள் உட்பட 23 பேருக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அரசு ஆவணங்களில் இருந்துள்ளது. ஆனால் அந்த நிதி பயனாளிகளுக்கு சென்று சேராத நிலையில், 35 லட்சத்து 31 ஆயிரத்து 517 ரூபாயை கூட்டாக முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.