சென்னை முதல் பெங்களுரூ வரை தங்க நாற்கர சாலை பின்பு ஆறுவழிச்சாலையாக மாற்றப்பட்டு செல்கிறது. இந்த சாலை பலயிடங்களில் குண்டும் குழியுமாக உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, சென்னை முதல் வாலாஜாபேட்டை வரை குண்டும் குழியுமாக உள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் என பலமுறை வாகன போக்குவரத்து சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துவந்தனர்.
ஆனால் சாலையை பராமரிக்கும் தனியார் நிறுவனம், இதனை கண்காணிக்கும் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் போன்றவை செவிமடுக்கவில்லை. குண்டும், குழியுமான தேசிய நெடுஞ்சாலையில் செல்வதற்கு வாலாஜா, ஸ்ரீபெரும்புத்தூரில் சுங்கச்சாவடி அமைத்து வசூல் மட்டும் நடத்துகின்றனர்.
இந்நிலையில் நவம்பர் 14ந்தேதி சென்னை முதல் வாலாஜா வரையிலான தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சாலை சீரமைக்கும் வரை சுங்கசாவடியில் சுங்ககட்டணம் வசூலிக்க கூடாது என கூறி வாலாஜாப்பேட்டை வட்டாச்சியர் அலுவலகம் முன்பு வேலூர் கிழக்கு மாவட்ட பாமக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாமக மாநில துணை செயலாளர் சரவணன், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நல்லூர் சண்முகம் உள்ளிட்ட அக்கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். போராட்டம் நடத்துவதாக கூறினாலும் தேசிய நெடுஞ்சாலையை துறையையோ, மத்திய பாஜக அரசையோ, மாநில அதிமுக அரசையோ பெரியதாக கண்டிக்காமல், சாலையை பராமரிக்க வேண்டிய அந்த தனியார் நிறுவனத்தை மட்டும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்தனர் என்பது குறிப்பிடதக்கது.