தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ரயில்நிலையத்தை 400க்கும் மேற்பட்ட பா.ம.க தொண்டர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ரயில்நிலையத்தில் குருவாயூர் விரைவுரயிலை மறித்து பல தொண்டர்கள் முழக்கமிட்டனர். அப்போது பா.ம.க. தொண்டர் ரஞ்சித் (28) ரயிலின் பக்கவாட்டு பகுதி வழியாக மேலே ஏறி கட்சிக்கொடியை காட்டி கோஷமிட முற்பட்டார். அப்போது ரயிலின் மேற்புறம் உள்ள உயரழுத்த மின் கம்பியில் கைப்பட்டு மின்சாரம் தாக்கி படுகாயத்துடன் கருகி கீழே விழுந்தார்.
மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த ரஞ்சித் உடனடியாக மீட்கப்பட்டு திண்டிவனம் மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்க்கப்பட்டார். மேலும், அவருக்கு 80 சதவிகிதத்திற்குமேல் தீக்காயம் ஏற்பட்டதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மின்சாரம் தாக்கப்பட்ட பா.ம.க. தொண்டர் ரஞ்சித்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.