![pmk party leaders in tamilnadu](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZgU68nWxiXuVvrgKkilOzbf5HBmTpJDC9yKR1fbQT2U/1611945720/sites/default/files/inline-images/ERD29_PMK-2%20%281%29.jpg)
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியாக உள்ள பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 20% உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் சமூக அமைப்பான வன்னியர் சங்கத்தினர் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடக்கத்தில் இக்கட்சி அமைப்பு ரீதியாக உள்ள பகுதிகள் என மாநிலம் முழுக்க ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலகங்களில் அந்தந்த வி.ஏ.ஓ.க்களிடம் 20% உள் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மனு கொடுத்தனர். அடுத்து யூனியன் அலுவலகமான ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.களிடம் மனுக்களை வழங்கினர். அதைத் தொடர்ந்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுப்பது என 5 கட்டமாக மனு கொடுக்கும் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர். ராமதாஸ், ஆலோசனைப்படி, ஜனவரி 29- ஆம் தேதி ஆறாவது கட்டமாக மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுக்கும் போராட்டம் தமிழகம் முழுக்க நடந்தது.
![pmk party leaders in tamilnadu](http://image.nakkheeran.in/cdn/farfuture/cQxeKY609I1DuCasi-SQycbp0CyvHvV9aI6bPm8ytbs/1611945767/sites/default/files/inline-images/ERD29_PMK-1%20%281%29.jpg)
அதன் தொடர்ச்சியாக, ஈரோட்டில் காலை அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பா.ம.க.வினர் குவியத் தொடங்கினர். இதனால் ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் தலைமையில் பா.ம.க.வினர் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து பெருந்துறை ரோடு வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்றனர். அப்போது வன்னியர் சமூகத்திற்கு 20% உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில நிர்வாகிகள் மட்டும் உள்ளே சென்று மாவட்ட ஆட்சியர் கதிரவனை சந்தித்து மனு கொடுத்தனர்.
![pmk party leaders in tamilnadu](http://image.nakkheeran.in/cdn/farfuture/EaiCDOpaIV-mq-3ywxgPPSRPYW5Q5rv3oMAagSFLOj4/1611945813/sites/default/files/inline-images/IMG-20210129-WA0024%20%282%29.jpg)
இதேபோல் நாமக்கல், கரூர் மாவட்டங்களிலும் மனு கொடுக்கும் போராட்டத்தை பா.ம.க.வினர் நடத்தினர். அரசியல் ரீதியாக பா.ம.க.வின் அமைப்பு பலமாக இருப்பதைக் காட்டவும், வன்னியர் சமூக மக்களுக்கு பா.ம.க. மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும், இந்த 20% உள் இடஒதுக்கீடு கோரிக்கையும், அதன் தொடர்ச்சியாக நடந்த மனு கொடுக்கும் போராட்டங்களும், பா.ம.க.வுக்கு பயன் கொடுத்துள்ளது. அதே சமயம் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. எதிர்பார்க்கும் தொகுதி கிடைக்குமா அதற்கான நெருக்கடியை இது உருவாக்குமா என்றால்? அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவுதான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.