Skip to main content

“தமிழன்னைக்கு தொண்டு செய்து என்னை மகிழ்ச்சிப்படுத்துங்கள்...” - ராமதாஸ் 

Published on 17/04/2023 | Edited on 17/04/2023

 

PMK Leader Ramadoss written letter to his party workers

 

“தமிழைத் தேடி இயக்கத்தின் பணிகள் பயனளிக்கத் தொடங்கியுள்ளன. அதை நினைத்து இளைப்பாறாமல் தொடர்ந்து அதே வேகத்தில் தமிழ்ப் பணிகளைச் செய்வோம். அவ்வாறு செய்தால், ‘எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்’ என்ற இலக்கை எட்டும் நாள் கண்ணுக்குத் தெரியும் தொலைவில்தான் இருக்கிறது. அதை எட்டும் வரை ஓய்வெடுக்காமல் உழைத்துக் கொண்டே இருப்போம்” என பாமகவினருக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மடல் ஒன்றை எழுதியுள்ளார். 

 

அதில் அவர், “தமிழ்நாட்டில் சிதைக்கப்பட்டு வரும் தமிழ் மொழியை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் நாம் மேற்கொண்ட  ‘தமிழைத் தேடி...’ விழிப்புணர்வு பரப்புரை பயணம் ஆக்கப்பூர்வ தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இது மகிழ்ச்சியளிக்கும் செய்திதான். ஆனால், மனநிறைவடைந்து இளைப்பாற வேண்டிய செய்தியல்ல.

 

PMK Leader Ramadoss written letter to his party workers

 

உயரத்தை நோக்கி பயணிக்கும்போது இளைப்பாறலாம்; அதற்கு இடமும், வாய்ப்பும் உண்டு. ஆனால், மிகப்பெரிய பள்ளத்திலிருந்து மீண்டு வரும்போதோ அல்லது ஒருவரை மீட்டு வரும்போதோ நாம் இளைப்பாறுவதற்கு இடமும் கிடையாது, வாய்ப்பும் இருக்காது. அத்தகைய சூழலில் இளைப்பாறினால்  நாம் எவ்வளவு தொலைவு மீண்டு வந்தோமோ அல்லது மீட்டெடுத்து வந்தோமோ அவ்வளவு தொலைவு பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கும். அதை சொந்தங்களுக்கு விளக்குவதற்காகத் தான் இந்த மடல்.

 

‘தமிழைத் தேடி...’ விழிப்புணர்வுப் பரப்புரை பயணம் கடந்த பிப்ரவரி திங்கள் 28 ஆம் நாள் நிறைவு அடைந்த பிறகு பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர்களுக்கும், பாட்டாளி சொந்தங்களுக்கும் நான் மூன்று அன்புக் கட்டளைகளைப் பிறப்பித்திருந்தேன். அவற்றை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

 

1. முதல்கட்டமாக மாவட்ட அளவிலும், ஒன்றிய, நகர, பேரூர் அளவிலும் தமிழைத் தேடி இயக்கத்திற்கு பொறுப்பாளர்கள் அமர்த்தப்பட வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் 10 பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவர்கள் தமிழ் மொழி மீது பற்று கொண்டவர்களாகவும் தமிழைப் பரப்புபவர்களாகவும் இருக்க வேண்டும்.

 

2. இரண்டாவதாக, கடைகளின் பெயர்ப் பலகைகளை தனித்தமிழில் மாற்ற வேண்டியதன் தேவையை ஒவ்வொரு வணிகரும் உணரச் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் வணிகர்களுக்கு வழங்குவதற்கான துண்டறிக்கை கட்சித் தலைமையால் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது. அதை ஒவ்வொரு மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூருக்கு தேவையான எண்ணிக்கையில் அச்சிட்டு, ஒவ்வொரு கடைக்கும் சென்று வழங்க வேண்டும்.

 

3. மூன்றாவதாக, அன்றாடம் நாம் பயன்படுத்தும் சொற்களில் எவையெல்லாம் தனித்தமிழ் சொற்கள்,  எவையெல்லாம் பிறமொழி கலப்புச் சொற்கள் என்பதை நமது மக்களுக்கு நாம் தெரிவிக்க வேண்டும். அதற்காக, ‘தனித்தமிழ் சொற்கள் அறிவோம்’ என்ற தலைப்பில் தலைமை வடிவமைத்துக் கொடுத்த பதாகைகளை மக்கள் கூடும் இடங்களில் அமைக்க வேண்டும்.

 

இந்தப் பணிகளையெல்லாம் செய்ய வலியுறுத்தி பாட்டாளி சொந்தங்களுக்கு மார்ச் 23 ஆம் நாள், “தமிழன்னைக்கு தொண்டு செய்து என்னை மகிழ்ச்சிப்படுத்துங்கள்” என்ற தலைப்பில் உங்களுக்கு  விரிவான மடல் எழுதியிருந்தேன். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 2ஆம் நாள் தைலாபுரம் தோட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தை நடத்தி மேற்கண்ட தமிழ்ப் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக விளக்கினேன். உங்களுக்கு மடல் வரைந்து 25 நாட்களுக்கும், செயல் விளக்கம் வழங்கி 15 நாட்களுக்கும் மேலாகிவிட்டன. ஆனால், உங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் ஏற்படாதது மனக்குறையளிக்கிறது.

 

PMK Leader Ramadoss written letter to his party workers

 

கடைகளின் பெயர்ப் பலகைகளை தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணையின்படி மாற்றியமைக்கக் கோரும் துண்டறிக்கைகளை வணிகர்களுக்கு வழங்கும் பணி பல மாவட்டங்களில் நடந்திருக்கிறது.  குறிப்பிடத்தக்க இடங்களில் வணிகர்களை ஊக்குவித்து பெயர்ப்பலகைகள் தனித்தமிழில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், எண்ணற்ற இடங்களில் தனித்தமிழ் சொற்கள் அறிவோம், குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர்கள் ஆகிய பதாகைகள் அமைக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. இவற்றுக்குக் காரணமான பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நான் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், இப்பணிகள் இன்னும் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பமும், எதிர்பார்ப்பும்.

 

ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘தமிழைத்தேடி...’ இயக்கத்திற்கு பொறுப்பாளர்கள் அமர்த்தப்பட்டிருப்பது குறித்த விவரங்கள் இன்னும் தலைமைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இது விரைவுபடுத்தப்பட வேண்டும். பாட்டாளி சொந்தங்களிடம் நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல உங்களுக்கு  வழங்கப்பட்டுள்ள இந்த 3 பணிகளும் மிகவும் எளிமையானவை; நீங்கள் செய்யும் இந்த பணிகள் தமிழன்னைக்கு செய்யும் தொண்டு ஆகும். இந்தப் பணிகள் வழங்கப்பட்ட பிறகு கடந்த மார்ச் 26-ஆம் நாள் சென்னையில்  பல கடைகளுக்கு நானே நேரில் சென்று, கடைகளின் பெயர்ப்பலகைகளை தமிழில் மாற்றக் கோரும் துண்டறிக்கைகளை வழங்கினேன். தனித்தமிழ் சொற்கள் அறிவோம் பதாகைகளையும் திறந்து வைத்தேன்.

 

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் மாற்றியமைக்க வேண்டும்; அரசாணையில் குறிப்பிடப்பட்டவாறு அமைக்க வேண்டும் என்ற நமது கோரிக்கையை, அறிவுறுத்தலை அனைத்து கடைகளின் உரிமையாளர்களும், மேலாளர்களும் ஆதரிக்கின்றனர். பெயர்ப்பலகைகளை எவ்வாறு மாற்றியமைக்க வேண்டும் என்று வழிகாட்டும்படி நம்மை கேட்கிறார்கள். இது தமிழை வளர்க்க சிறந்த வாய்ப்பு. இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து கடைகளின் உரிமையாளர்களையும் நட்புடன் அணுக வேண்டும்; அவர்கள் கடையின் பெயரை எவ்வாறு தமிழில் மாற்றியமைக்கலாம் என்பது குறித்து அவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கலாம். அவ்வாறு செய்தால்  அதை ஏற்றுக் கொள்ள வணிகர்கள் தயாராக இருக்கின்றனர் என்பதால் அனைத்து ஊர்களிலும்  உள்ள வணிகர்களை நேரில் சந்தித்து துண்டறிக்கைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

அதேபோல், தனித்தமிழ் சொற்கள் அறிவோம், குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் ஆகிய பதாகைகள் அமைக்கும் பணியை அனைத்து நிலை பொறுப்பாளர்களும் போட்டிப்போட்டுக் கொண்டு மேற்கொள்ள வேண்டும். தமிழைத் தேடி இயக்கத்திற்கு மாவட்ட அளவிலும், ஒன்றிய, நகர, பேரூர் அளவிலும் பொறுப்பாளர்களை அமர்த்த வேண்டும். மீண்டும், மீண்டும் சொல்கிறேன்.... இவை தமிழன்னைக்கு  செய்யும் தொண்டுகள். தமிழன்னைக்கு தொண்டு செய்வதன் மூலம் என்னை மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

 

தமிழைத் தேடி இயக்கத்தின் பணிகள் பயனளிக்கத் தொடங்கியுள்ளன. அதை நினைத்து இளைப்பாறாமல் தொடர்ந்து அதே வேகத்தில் தமிழ்ப் பணிகளை செய்வோம். அவ்வாறு செய்தால், ‘எங்கும் தமிழ்.... எதிலும் தமிழ்’ என்ற இலக்கை எட்டும் நாள் கண்ணுக்கு தெரியும் தொலைவில் தான் இருக்கிறது. அதை எட்டும் வரை ஓய்வெடுக்காமல் உழைத்துக் கொண்டே இருப்போம் பாட்டாளி சொந்தங்களே” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்