தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நாளை மறுநாளுடன் (04/04/2021) பிரச்சாரம் ஓய்வு பெறுகிறது. இந்த நிலையில், அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, பாமக, பாஜக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (01/04/2021) மேற்கு வங்கத்தில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தார். அதைத் தொடர்ந்து, உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்ற பிரதமருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது. அதையடுத்து, மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரரை பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்தார். பின்பு கோயில் முழுவதும் சுற்றிப் பார்த்த பிரதமர், சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் குறித்து கேட்டறிந்தார். சுமார் 40 நிமிடத்திற்கும் மேல் கோயிலில் இருந்த அவர், பின்பு மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கினார். பிரதமரின் வருகையையொட்டி, மதுரை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுரை மாவட்டம், பாண்டிகோவில் ரிங்ரோடு அம்மா திடலில் இன்று (02/04/2021) காலை 11.30 மணிக்கு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். இந்தப் பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
மதுரை பிரச்சாரத்தை முடித்த பின், கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்திற்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு பின்னர் கன்னியாகுமரி வருகிறார். அகஸ்தீஸ்வரத்தில் இன்று (02/04/2021) மதியம் 02.30 மணிக்கு நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர், கன்னியாகுமரியில் அதிமுக - பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனையும் ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.