மயிலாடுதுறை அருகே நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி இளைஞர் ஒருவர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி சிரசாசனம் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பொதுமக்களும் அந்த இளைஞருக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் இலுப்பூரில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றித்தர வேண்டும் எனப் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிற நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இதுவரை அதிகாரிகளுக்கு இதுதொடர்பாக கொடுத்திருந்த மனுக்களை மாலையாகக் கோர்த்து செல்போன் கோபுரத்தின் கீழே கட்டிவிட்டு மேலே ஏறிச் சென்றார். மேலே சென்றவர் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி சிரசாசனம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். செல்போன் கோபுரத்தின் மீதேறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு ஆதரவாக அந்த கிராம மக்கள் செல்போன் கோபுரத்தின் கீழே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.