கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இன்று (19.01.2024) முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி சென்னை நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி ‘கேலோ இந்தியா விளையாட்டு’ போட்டியை இன்று மாலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் புது பொலிவுடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள டிடி தமிழ் ஒளிபரப்பை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தூர்தர்ஷனின் தமிழ் ஒளிப்பரப்பான டிடி பொதிகை, ‘புதிய எண்ணங்கள் புதிய வண்ணஙகள்’ என்ற வாசகத்துடன் டிடி தமிழ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “தூர்தர்ஷனின் புதிய பரிமாணமான, டிடி தமிழ் புதிய எண்ணங்களுடனும், புதிய வண்ணங்களுடனும் புனரமைக்கப்பட்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. 40 கோடி ரூபாய் செலவில், புதிய பரிமாணம் பெற்றுள்ள டிடி தமிழ் தொலைக்காட்சியில், பழைய நினைவுகளுக்குச் சொந்தமான ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியோடு, பல்வேறு கலாச்சார மற்றும் பிற நிகழ்ச்சிகளும் இனி நம்மை ஆட்கொள்ளப் போகிறது.
அதோடு, இந்தியாவின் 12 மாநிலங்களில் 26 புதிய பண்பலை கோபுரங்கள் அமைப்பதற்கான 2500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டம் நிறைவடையும் காலத்தில் தேசத்தின் 65 சதவீத நிலப்பரப்பையும், 78 சதவீத பொதுமக்களையும் நமது தூர்தர்ஷன் சென்றடையும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.