தேசிய தென்னிந்திய நதி நீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு விருத்தாசலத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.
அப்போது அவர், " விருத்தாசலம் அருகேயுள்ள ஆரூரான் மற்றும் அம்பிகா சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவை தொகை வழங்ககோரி கடந்த மாதம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது ஆலை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, ஜனவரி 3 ஆம் தேதிக்குள் நிலுவை தொகையில் 100 கோடி ரூபாய் தருவதாக உறுதி கூறி ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை அளித்தனர். அதன் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் ஆலை நிர்வாகம் தருவதாக கூறிய நிலுவை தொகை இதுவரை வழங்கவில்லை. தமிழக அரசு விவசாயிகளை அடிமைகளாக நினைப்பதே இந்த அலட்சியத்திற்கு காரணம்" என்றார்.
மேலும் "மத்திய அரசு விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தருவதாக அறிவித்தும் இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உட்பட அனைத்து கொள்முதல் நிலையங்களிலும், அதிகாரிகள் துணையுடன் மாநில அரசு அறிவித்த விலையை தராமல் விவசாயிகளை அழித்து கொள்ளையடித்து கொண்டிருப்பதை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை. இதனை வலியுறுத்தி விவசாயிகளை ஒன்று திரட்டி சென்னையில் மாபெரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
அதேபோல் விவசாயிகளுக்கு லாபகரமான விலை தருகிறேன் என்று கூறிய மத்திய அரசு தராததால், லக்னோ, பிளிபிட் உள்ளிட்ட இடங்களில் போராட்டமும், வருகின்ற தேர்தலில் விவசாயிகளுக்கு லாபகரமான விலை தரக்கூடிய அரசியல் கட்சிக்கு மட்டும் தான் வாக்களிப்போம் என்பதையும் வலியுறுத்தி டெல்லியில் 10 லட்சம் விவசாயிகளை திரட்டி போராட போவதாகவும் அறிவித்தார்.
தமிழக அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் விவசாயிகளின் நலனுக்காக எவ்வித நலத்திட்டங்களும் இல்லை. மேலும் விவசாயிகளை கடனாளிகளாக ஆக்குவதற்கே கடன் திட்டத்தை அறிவித்துள்ளார்கள். சர்க்கரை ஆலை தரவேண்டிய நிலுவை தொகை ரூபாய் 500 கோடி உள்ளபோது, தமிழக அரசு அறிவித்த கரும்பு ஊக்கதொகை 200 கோடி எனபது ஒருபோதும் பற்றாது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாமல், வாகனம் நிறுத்துவதற்கு அரசு நிதி ஒதுக்கியிருப்பது வேடிக்கையாக உள்ளது" என்றும் அவர் கூறினார்.