Skip to main content

சென்னையில் பிரதமர் மோடி!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
PM Modi in Chennai
கோப்புப்படம்

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இன்று (19.01.2024) முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதில், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 5500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள், 1600க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், 1000க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.

அதே சமயம் நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் நடைபெறும் ‘கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு’ தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதற்காக பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். இதனையடுத்து மாலை 06:00 மணி அளவில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர்.

இதனையொட்டி சென்னை விமான நிலையத்திற்கு வருகைபுரிந்த பிரதமர் மோடியை தமிழக அரசு சார்பில் மூத்த அமைச்சர்கள் துரை முருகன், கே.என். நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு ஆகியோர் வரவேற்றனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாநிதி மாறன், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் வரவேற்றனர். சென்னை மேயர் பிரியா ராஜனும் பிரதமர் மோடியை வரவேற்றார். மேலும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், ஆகியோர் வரவேற்றனர். இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்கிறார். 

சார்ந்த செய்திகள்