கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதி நாளான கடந்த 11 ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முழுவதுமாக நடைபெறவில்லை. நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகள் சார்பில், மணிப்பூரில் பழங்குடியினப் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வந்தது. அதே சமயம் எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. பல குற்றங்களுக்கு தண்டனைகள் குறைக்கப்பட்டுள்ளன. மத்திய பாஜக அரசு 42 சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் அரசாக மட்டுமே பாஜக செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி நாட்டின் பிரச்சனைகளைத் தீர்க்காமல், அலட்சியமாக செயல்பட்டு வருகிறார். மணிப்பூர் கலவரத்தில் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் காடுகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். பிரதமர் மோடி மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்காமல் பொறுப்பற்ற முறையில் செயல்படுகிறார்.
மாநிலக் கட்சியான திமுக மீது நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விமர்சனம் வைக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அச்சம் இங்குதான் உள்ளது. தமிழ்நாட்டில் அவர்கள் நினைத்ததை சாதிக்க முடியாது என்பதைக் கடந்த காலத்தில் நிரூபித்துள்ளோம். அதே போன்று வரும் தேர்தலிலும் நிரூபிப்போம். நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் நோக்கம் அல்ல. மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என்பதற்காகவே குரல் எழுப்பினோம். மக்களவை, மாநிலங்களவைகளில் ஒரு சட்டம் ஒரே நாளில் நிறைவேறிய வரலாறு கிடையாது. ஆனால், எந்த விவாதமும் நடத்தாமல் பாஜகவினர் நிறைவேற்றியுள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.