பிரதமரின் விவசாயிகளுக்கான கிஸான் நிதி உதவி திட்டத்தில் போலி விவசாயிகள் சேர்க்கப்பட்டு கோடிக் கணக்கான ரூபாய் நிதிமோசடி செய்யப்பட்டது. இது சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வருவாய்த்துறையினர் ஆகியோர் தீவிர விசாரணை செய்து மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மைத் துறையில் ஒப்பந்த ஊழியர்களாக வேலை செய்துவந்த திருநாவலூரை சேர்ந்த மணிகண்டன், மாரிமுத்து, கலைச்செல்வன் தனியார் பயிர் காப்பீட்டு முகவர் சிலம்பரசன் ஆகியோர் இந்த கிஸான் திட்ட மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்த ஒப்பந்த ஊழியர்கள் நால்வரும் போலி விவசாயிகள் 1,500 பேரிடம் தலா 500 முதல் 1,000 ரூபாய் வரை கையூட்டு பெற்றுக்கொண்டு கிஸான் திட்டத்தில் அவர்களை சேர்த்து உள்ளனர். அவர்கள் வங்கிக் கணக்கிற்கு பிரதமரின் திட்ட நிதியிலிருந்து பணம் அனுப்பி உள்ளனர். அதன்மூலம் அவர்களுக்கு மத்திய அரசின் பணம் சென்றுள்ளது. இதை கண்டறிந்த சி.பி.சி.ஐ.டி போலீசார் மேற்படி நால்வரையும் நேற்று கைது செய்துள்ளனர்.
அவர்களை விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுவரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி 20 பேர் வரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு மாவட்டங்களில் மோசடிகளில் ஈடுபட்டவர்களை தினசரி சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து வருகின்றனர். மோசடியில் பணம் பெற்ற போலி விவசாயிகளிடம் இருந்து பணத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.