விநாயகர் சதுர்த்தி நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்பதற்கான பணிகள் தற்போது துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு முடிவடைந்து சிலைகளுக்கு வண்ணம் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சில ஆண்டுகளாகவே இரசாயனம் கலந்த பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உள்ளிட்ட பொருட்கள் மூலம் விநாயகர் சிலைகளை தயாரிக்க அரசு தடை விதித்ததோடு, விநாயகர் சிலை தயாரிப்பதற்கான பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு வெளியிட்டு இருந்தது. அதன்படி பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட சிலைகள் உள்ள இடங்கள் மற்றும் குடோன்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து குடோன்களை மூடிய சம்பவங்களும் நிகழ்த்திருந்தது.
இந்நிலையில் வடமாநிலத்தவர் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் சிலை தயாரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என சேலத்தில் களிமண் மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
குலாலர் மண்பாண்டம், களிமண் பேப்பர் கூழ் விநாயகர் சிலை பொம்மைகள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலைகளுடன் மனு அளித்தனர். மேலும் சிலை தயாரிப்பதற்கான கட்டுப்பாடுகளை விரைவாக அரசு வெளியிட வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.