Skip to main content

காவி உடையில் திருவள்ளுவர் படம்; அமைச்சர் ரகுபதி தெரிவித்த கருத்து என்ன?

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
Picture of Thiruvalluvar in saffron; What was the comment made by Minister Raghupathi?

தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் இன்று (24.05.2024) மாலை 5 மணிக்குத் திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அச்சிடப்பட்ட திருவள்ளுவர் திருநாள் விழா அழைப்பிதழ் ஒன்று வெளியாகி இருந்தது. அதன் முகப்பு பக்கத்தில் காவி உடையில் திருவள்ளுவர் உள்ளது போன்று அச்சிடப்பட்டிருந்தது.ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ்குமார் பெயரில் இந்த அழைப்பிதழ் வெளியிடப்பட்டது. இதனால் சர்ச்சை ஏற்பட்டது.

மேலும் காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்தை வெளியிட்டதைக் கண்டித்து தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளன எனத் தகவல் வெளியாகி இருந்தது. திருவள்ளுவர் திருநாள் விழா எனக் காவி உடையில் திருவள்ளுவர் படத்துடன் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழில் மக்கள் மத்தியில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகைக்குக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவள்ளுவர் காவி உடை சர்ச்சை எழுந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளுநர் மாளிகைக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

Picture of Thiruvalluvar in saffron; What was the comment made by Minister Raghupathi?

அதே சமயம் காவி உடையுடன் இருக்கும் திருவள்ளுவர் படத்திற்குத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (24.05.2024) மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “திருவள்ளுவர் திருநாள் (வைகாசி அனுஷம் வள்ளுவர் திருநாள்) எனும் புனிதமான தருணத்தில், ஆளுநர் ஆர்.என். ரவி மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் திருவள்ளுவரைத் தரிசனம் செய்தார். பின்னர், ஆளுநர் மாளிகையில் தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கு ஆளுநர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஜனவரி மாதம் 16 தேதி (16.01.2024) திருவள்ளுவர் காவி உடை அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு திருவள்ளுவர் தினத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அதில், “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும் புலவரும், சிறந்த தத்துவ ஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையைச் செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனிதக் குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்தப் புனிதமான நாளில் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Picture of Thiruvalluvar in saffron; What was the comment made by Minister Raghupathi?
கோப்புப்படம்

இந்நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “குரங்கு கையில் பூமாலை கிடைத்தால் அதனைப் பிய்த்துக்கொண்டே தான் இருக்கும். அதுபோல என்னவோ நம்முடைய கெட்ட நேரம் அது போன்று நமக்கு ஆளுநர் வந்து வாய்த்துள்ளார். ஏற்கனவே திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்தது சர்ச்சை கிளம்பியது. திருப்பி காவி உடை அணிவித்தால் ஆளுநரை என்னதான் செய்ய முடியும். வாதத்துக்கு மருந்து உண்டு. பிடிவாதத்துக்கு மருந்து கிடையாது” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்