பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, ரெகாப் இந்தியா பவுண்டேஷன், ரெகாப் பவுண்டேஷன், கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா, அனைத்திந்திய இமாம் கவுன்சில், தேசிய மனித உரிமைகள் கூட்டமைப்பு, தேசிய மகளிர் ஃபிரண்ட், ஜூனியர் ஃபிரண்ட் ஆகிய இயக்கங்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. அதேபோல் எம்பவர் இந்தியா பவுண்டேஷன் அமைப்புக்கும் 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது. மேலும் அவ்வமைப்பின் டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களையும் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஒவ்வொரு மாநிலமும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் தடை செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிட்டால்தான் மாநிலங்களிலும் இந்த தடைச் சட்டம் அமலில் இருப்பது உறுதியாகும் என்ற வகையில் தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தார். இந்நிலையில் மத்திய அரசு விதித்த தடை உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில் தமிழக அரசும் இது தொடர்பான அரசாணை வெளியிட்டுள்ளது.