வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப்போகச்செய்யும் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெட்ரோல் குண்டு வீசியவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போகச்செய்யும் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது திடீரென மேடையின் பின்புறம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அது வெடிக்காமல் கீழே விழுந்து எரியத்தொடங்கியது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அதனை அணைத்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. பின்னர் பெட்ரோல் குண்டு வீசியதாக ஒருவரை கூட்டத்தில் பங்கேற்றோர் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் உருளையன்பேட்டை போலீசார் மர்மநபரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த வேல்முருகன் (34)என்பவர் புதுச்சேரியிலுள்ள தனியார் ஹோட்டலில் வேலை செய்கிறார் என்று தெரிய வந்துள்ளது.
அவர் முழு மதுபோதையில் உள்ளதால் இதுவரை அவர் யார் எதற்காக இதனை செய்தார் என்ற விவரம் அறியப்படவில்லை. போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.