ஈரோடு எஸ்.பி அலுவலகத்திற்கு இன்று ஈரோடு, காசிபாளையம், காந்திஜி ரோடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவர் தனது குடும்பத்தாருடன் வந்து மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் எனது கணவர் செல்வத்துடன் வசித்து வருகிறேன். இந்நிலையில், நானும் எங்கள் பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் ஏல சீட்டு சேர்ந்து பணம் கட்டி வந்தோம். இந்நிலையில், அந்தப் பெண் எங்களிடம் பணம் இருந்தால் கொடுங்கள். அதிக வட்டி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறினார்.
இதனை நம்பி நான் எனக்கு சொந்தமான இடத்தை அடமானம் வைத்து கடந்த வருடம் மே மாதம் 17ஆம் தேதி அவரிடம் ரூ. 4 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்தேன். அந்தத் தொகையை பெற்றுக் கொண்ட அவர், இதுவரைக்கும் அந்த பணத்துக்கு வட்டி கொடுக்கவில்லை. நான் பலமுறை அவரிடம் கேட்டதற்கு வட்டியும் தர முடியாது, பணமும் தர முடியாது உன்னால் என்ன செய்ய முடியுமோ செய் என்று கூறி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
மேலும் அவர் இதைப்போல் பலரிடமும் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார். என் தொகை 4,80,000 போக பலரிடம் ரூ.19 லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வர வேண்டிய பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.