வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த தரைக்காடு பகுதியைச் சேர்ந்த ஷம்ஷீர்(32). இவர் அதேபகுதியில் நடைபெறும் சூதாட்டம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷம்ஷீரை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஷம்ஷீர் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து ஷம்ஷீர் மனைவி ரஷீத்தாதமிம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ஷன்ஷூரை தாக்கியவர்களை பேரணாம்பட்டு காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே தன்னை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி பேரணாம்பட்டு காவல் நிலையம் எதிரில் ஷம்ஷீர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைப்பார்த்து உடனடியாக அங்கிருந்தவர்கள் ஷம்ஷீர் கையில் இருந்த கேனை பிடுங்கி எறிந்தனர். ஷம்ஷீர் குடும்பத்தினருடன் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சம்பந்தப்பட்டவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் விரைவில் கைது செய்யப்படுவதாகவும் காவல்துறை உறுதி அளித்தனர். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பேரணாம்பட்டு காவல் நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
சமூக நல ஆர்வலர்களும் காவல்துறைக்கு அவர் கொடுத்த தகவல் குற்றவாளிகளுக்கு எப்படி தெரிய வந்தது? காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகள் தானே சொல்லி இருக்க வேண்டும். அதனால் தான் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தாக்கியவர்களை இதுவரை கைது செய்யாமல் வைத்துள்ளனர், இதற்கு முழுக்க முழுக்க காவல்துறை அதிகாரிகளை காரணம் எனச் சந்தேகப்படுகிறோம் என்கிறார்கள்.